Saturday, May 2, 2009

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - பாகம் 2


எதிரி நாட்டுக்குள் புகுந்து போர் புரிந்து அந்த நாட்டையே அழித்தாலும் அந்நாட்டுப் பெண்கள் மீது வீரர்கள் விருப்பம் கொண்டு தூக்கி வந்து தனதாக்கிக் கொள்வர். அதுபோல தான் இப்பொழுது தமிழ் சமூகத்தின் அரசியல் வாதிகளும் சினிமாக்காரர்களும் செய்து வருகிறார்கள். இவர்கள் செய்வதெல்லாம் பிராமணர்களுக்கு எதிரான இனப்போர். கலாச்சாரப் போர். ஆனால் இதை எதிர்ப்போர் கிடையாது. இலங்கை இனப்போரிலாவது எதிர்ப்பதற்க்கு ஆள் இருக்கு. ஆனால் பிராமணர்களுக்கு வாதிடவும் ஆள் கிடையாது. அதனால் பலனும் கிடையாது. அதை எதிர்பார்க்கவும் முடியாது.

ஆனால் அரசியல் வாதிகளில், பிராமண எதிப்பு செய்யும் பல பெரியமனிதர்கள் வீட்டில் பிராமணப் பெண்கள் மனைவிமார்களாகவும், மருமகள்களாகவும் இருக்கிறார்கள். இத்தனை செல்வாக்கும் அதிகாரமும் படைத்த இந்த அரசியல் வாதிகள் எல்லோருமே முஸ்லீம் மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்பவர்கள். ஆனால் இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் முஸ்லீம் பெண்களைக் காதலிப்பதில்லை. ஒரு பாத்திமாவை ஒரு ஷகீதாவை இவர்கள் ஏன் மருமகள்களாக ஏற்றுக்கொள்ளவில்லை? இது பாரபட்சத்தை எடுத்துக் காட்டும் ஒரு கேள்விதான், யாரையும் புண்படுத்த அல்ல.

இப்படி பிராமணர்களை அவமானப்படுத்துவதிலும் பிராமணர்களுக்கே தொடர்ந்து புத்தி சொல்வதுமாக நடித்து அதில் மிகவும் ஆத்ம சாந்தி அடைந்து கொள்பவர்களில் முக்கியமானவர் சத்தியராஜ். இவரும் மணிவண்ணனும் சேர்ந்து விட்டால் போதும். இவர்கள் பிராமணர்களை பரிகாசம் செய்வதற்கு அளவே இல்லாமல் போய்விடும்.

சினிமாக்காரர்களும் பிராமணர்களுக்கு எதிரான இந்த வகை கலாச்சார அழிப்பை விரும்பிச் செய்கிறார்கள். சத்தியராஜ் முடிந்தவரை பிராமணர்களை பரிகாசம் செய்வார். தான் பணம் சம்பாதிக்க வில்லாதி வில்லன் படத்தில் ஒரு பிராமண வக்கீலகவே நடித்தார். இவருக்கு ஒரு பெண்ணும் இருப்பாள். வழக்கம் போல அந்த பிராமணரின் பெண்ணாக வரும் நக்மா வேறு ஜாதிக்காரரான இன்னொரு சத்தியராஜின் மீது காதல் கொள்வார். அப்படித்தானே நடந்தாகவேண்டும். இல்லையென்றால் படம் ஓடாதே. பிராமணப்பெண் வேறு ஜாதிக்காரனைதான் திருமணம் செய்யவேண்டும். இது சினிமாவில் எழுதப்படாத சட்டம். போதாக்குறைகு பம்பாய் மாமி என்று குத்தாட்டமும் போட்டார்.

சத்தியராஜ் நடித்த புதுமனிதன் படத்தில் கடலோரத்தில் மீனவ குப்பத்தில் இவரும் கவுண்டமணியும் கும்மாளம் போடுவார்கள். இதில் ஆச்சி ஒரு பிராமண மாமியாகவும் இவர்களது குப்பத்தில் இவர்களுக்கு சோறு போட்டு கூடவே இருக்கும் கதாபாத்திரம். குடித்து கூத்தடிப்பவர்களுடன் மடிசார் மாமி கதாபாத்திரம் கொஞ்சமும் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டு இவர்களது சமத்துவமும் பேசப்பட்டது. நாறிப்போனது மடிசார் தானே! இவர்களுக்கு என்ன கவலை. இவர்கள் புரட்சிக்காரர்கள் என்று பேர் வாங்கவேண்டுமே.


கண்ணாமூச்சி ஏனடா என்ற நகைச்சுவைச் சித்திரம். ஜாதியே இல்லமல் கூட அந்தப் படத்தில் நகைச்சுவை காண்பிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு விதத்தில் பிராமண பாஷையும் அப்படி கதாபாத்திரமும் வந்தே ஆகவேண்டும் என்று விதி இருக்கிறது. ஏனெனில் இவர்களுக்கு பிராமணர் என்றால் தானே சிரிப்பு வருகிறது. இந்தப்படத்தில் வித்தியாசமாக பெண்ணுக்கு பதிலாக பிராமண பையனுக்கு கலப்பு திருமணம் செய்து வைத்தார்கள். சினிமாக்காரர்கள் நல்ல படம் எடுக்கிறார்களோ இல்லையோ, பிராமணர்களுக்கு நன்றாகவே கலப்புத் திருமணம் செய்துவைக்கும் புரோகிதர்களாக இருக்கிறார்கள்.


கமலஹாசன் . அற்புதமான நடிகர். உலகம் போற்றும் மிகச்சிறந்த கலைஞர். இவர் அடிப்படையில் பிராமணர். ஆனால் தன்னை பூனூல் போட்டு பிராமணர் ஆக்கிவிடுவார்களோ என்று பயத்தில் பூனூல் வேண்டாம் என்று சொல்லி பிராமணராகாமல் விலகியவர். ஆனால் அடையாளங்களிலிருந்து இவர் விலகினாரே தவிர மனதளவில் இவர் பிராமண நிலையிலிருந்து வெளிவரவில்லை என்பது இவர் தனது படங்களில் பிராமணராக நடிப்பதில் காட்டும் அதீத விருப்பத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

அரங்கேற்றம் படத்தில் இவரும் தானே இருந்தார். அந்த தொற்று இல்லாமலா போகும். ஆனால் அதற்கு பிறகு மீண்டும் கோகிலா கடந்து மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பம்மல் கெ சம்மந்தம், பஞ்சதந்திரம், தசாவதாரம் வரை இவர் பிராமணராக நடிப்பதற்க்கும் , பிராமண கதாபாத்தை கதையில் உபயோகிப்பதற்கும் வஞ்சனை காட்டியதே இல்லை.

இவர் தயாரித்த நள தமயந்தி திரைப்படத்திலும் பிராமண பாத்திரமே முக்கிய சமையல் பாத்திரம். மகளிர் மட்டும் என்ற நகைச்சுவைப் படத்தில் ஊர்வசி வேடத்தில் பிராமண பாஷை படம் முழுக்க எல்லோரையும் சிரிக்க வைத்தது.

அவ்வை சண்முகி , பம்மல் கெ சம்மந்தம், தசாவதாரம் ஆகிய படத்தில் எல்லா கதாநாயகிகளும் பிராமண கதாபாத்திரமே. அவர்கள் சினிமா விதிப்படி பிராமணர் இல்லாத இந்த ஹீரோவைத்தான் கல்யாணமும் செய்வர். சரி அப்படி ஏன் பிராமண கதாபாத்திரத்தையே இவர்கள் துரத்த வேண்டும். ஜாதிகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? அப்படி எடுத்தாலும் பிராமண ஜாதிதான் எல்லோராலும் காண்பிக்கப் பட வேண்டுமா. ஏனென்றால் அவர்களுக்கு தானே அடையாளம் இருக்கிறது. ஒரு மடிசார், ஒரு நாமம், ஒரு பாஷை. இதே அடையாளம் இன்னும் பல ஜாதியினருக்கு இருக்கிறதே! வேறு மத பெண்களுக்கு இருக்கிறதே! அட அவர்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் பிராமணர்கள் என்றால் எதிர்க்க ஆளில்லை. அப்படியே எதிர்த்தால் தமிழ்நாட்டில் பப்பு வேகாது. நாதியத்த பசங்க‌. அதுனால யாரு வேண்டுமானாலும் பிராமணர்களின் அடையாளங்களை திரையில் உபயோகப்படுத்தி வேண்டுமட்டும் கேலி செய்யலாம்.

கமல்ஹாசனைப் பொருத்தவரை அவர் அதிகம் அவமதிப்பதில்லை. ஆனால் பிராமணர்களை படத்தில் உபயோகித்து, கலப்பு திருமண சடங்கும் செய்து வைத்து பிராமண கலாச்சார அழிப்பு கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதை வெளிப்படுத்த தவறியதில்லை. இத்தனை பிராமண கதாபத்திரத்தில் நடித்த இவர் கொஞ்ச நாளாவது பிராமணராக வாழ்ந்து பார்த்தால் சினிமாவில் தங்களை எப்படியெல்லாம் கேலிப்பொருளாக பயன்படுத்துகிறார்கள் என்பது இவருக்குப் புரியலாம். புரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தால்.

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்.......

தமிழ் சினிமாவில் ப்ராமணர்கள் - 3