Saturday, October 3, 2009

யோகிராஜ் வேதாந்திர மகரிஷியின் பொன்மொழிகள்!

ஆண் பெண் உறவுகளின் ஒழுக்கத்தின் மூலமே உயர்ந்த நாகரீகம் உண்டாகும். இந்த ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் கவசமே திருமணம் ஆகும்.

வாழ்க்கையின் மேம்பாடாக நற்றுணையாக மதிக்க வேண்டியது கணவனை மனைவியும் மனைவியைக் கணவனுமே. எனவே ஒவ்வொருவரும் கணவன், மனைவி உறவை உயிர்க்கு மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரின் உறவினர்களும் விருந்தினர்களாக வர வாய்ப்புகள் உண்டு. அவர்களை ஒத்த மதிப்போடு இருவரும் உபசரிப்பது கணவன் மனைவி இடையே அன்பு வளரச் செய்யும். எளிய உணவேயாயினும் விருந்தினரை உபசரிப்பதில் இன்முகம் காட்டுங்கள்.

கணவன் மனைவி உறவிலே பகைமை அல்லது பிணக்கு இருக்குமேயானால் ஒருவர் மற்றவர் மீது கோபம் கொள்வார்கள். அவற்றை உடனே சமாதானமாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அந்தக் கோபமே இருவருக்குமான சாபம் போல் அமைந்து விடும்.

குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது. அவை குழந்தைகளின் ஒழுக்கப் பண்பாட்டின் உயர்வுக்கு தடையாக இருக்கும்.

உடல் பொருள் ஆற்றல் என்ற மூன்றையும் ஒருவருக்கொருவர் மனமுவந்து அர்ப்பணித்து வாழ்க்கைத் துணைவராகி இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழும் பெருமை கணவன் , மனைவி உறவில்தான் அதிகமாக அடங்கியுள்ளது.

கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் உயிரைவிட மேலாகப் போற்றக்கூடிய ஒழுக்கம். உடல் உரம், மனநலம், பொருள் வளம் மூன்றையும் காக்க வல்லது கற்பு.

ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து உதவி செய்து, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை கணவன்-மனைவி இருவருமே உயிர் போல காக்க வேண்டும். துணையின் தேவையறிந்து உதவி செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சியின் அளவாகவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இன்பமும் அமையும்.

அன்பு, அருள், இன்முகம், களை போன்ற அம்சங்களுடன் கூடிய உருவப்படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள். குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும், நல்லவர்களாக, அழகு மிக்கோராகப் பிறப்பார்கள், வளர்வார்கள்.

No comments: